கோலாலம்பூர், மார்ச் 4 - சமய விழாவை கேலி செய்வதை சித்தரிக்கும் நிகழ்ச்சி தொடர்பான நிறுவனத்தின் உள் விசாரணை முடியும் வரை ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான ஒரு வானொலி நிலையத்தின் மூன்று தொகுப்பாளர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய ஆஸ்ட்ரோ, தொகுப்பாளர்களான நபில் அகமது, ஆசாட் ஜாஸ்மின் மற்றும் ராடின் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் காணொளியை ஏரா வானொலியின் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்தது.
அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப செயல்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
நேயர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் மரியாதைக்குரிய மற்றும் உள்ளடக்கிய ஊடக சூழலை உறுதி செய்வதற்கும் ஆஸ்ட்ரோ ஆடியோ உறுதிபூண்டுள்ளது.
தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் அதன் பார்வையாளர்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்காக அதன் உள்ளடக்க மதிப்பாய்வு செயல்முறையை வலுப்படுத்தவும் ஒளிபரப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது என அது குறிப்பிட்டது.
ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான ஒரு வானொலி நிலையத்தில் சமய விழாவை கேலி செய்த வானொலி தொகுப்பாளர்களின் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இநாட்டில் இன மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கருதப்படும் அச்செயலுக்கு சம்பந்தப்பட்ட மூன்று வானொலி தொகுப்பாளர்களும் மன்னிப்பு கோரினர்.
அந்த ஊழியர்களின் நடவடிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்த மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் முன்னதாக தெரிவித்திருந்தார்.


