கோலாலம்பூர், மார்ச் 4 - இந்து சமய விழாவை கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய ஆஸ்ட்ரோ வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் செயல் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதற்காக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலுக்கு மலேசிய இந்து சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்ட வானொலி நிலையம் பொறுப்புடன் செயல்பட்டு இந்த விவகாரத்திற்கு தீர்வு
காணும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அச்சங்கம் கூறியது.
அந்த காணொளி குறித்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த அச்சங்கம்,
மலேசியா போன்ற பல மத மற்றும் பன்முக கலாச்சார சமூகத்தில் எந்தவொரு மத நடைமுறையையும் கேலி செய்யும் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியது.
சமய உணர்வுகளின் புனிதத்தன்மை அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். மேலும் எந்தவொரு சமயத்திற்கும் எதிரான இதுபோன்ற வெளிப்படையான கேலிகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அது குறிப்பிட்டது.
இச்செயலுக்காக சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மன்னிப்பு கோரியிருந்தாலும் அவர்கள் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட்டதால் வானொலி நிலையம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எதிர்காலத்தில் சமயங்களை ஏளனப்படுத்தும் சம்பவங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டத் தரப்பினரை சட்டத்தின் கீழ் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
சமயங்களைத் தாண்டி அனைத்து மலேசியர்களிடையேயும் தேசிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துகிறது என்று அது அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


