கோலாலம்பூர், மார்ச் 4 – மனிதவள மேம்பாட்டுக் கழகமான `HRD Corp` வரலாற்றில், 2024ஆம் ஆண்டே மிகச் சிறந்த ஆண்டாக விளங்கியுள்ளது.
கடந்தாண்டு நிதி மற்றும் செயல்பாட்டு அடைவுநிலை உட்பட பல துறைகளில் அதன் சாதனை உச்சத்தைத் தொட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச லெவி கட்டணமும் 2024-ல் வசூலானது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8.9 விழுக்காடு அதிகரித்து 2.32 பில்லியன் ரிங்கிட்டாக லெவி கட்டண வசூல் பதிவாகியது.
ஏராளமான முதலாளிகள் விதிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியிருப்பதும், HRD Corp-பின் வசூல் முறையில் ஏற்பட்ட முன்னேற்றமும், இந்த வரலாறு காணாத லெவி கட்டண வசூலுக்கு உதவியிருப்பதாக அறிக்கை மூலம் அதன் நிர்வாகம் குறிப்பிட்டது.
மேலும், வசூலான தொகை, நேரடியாக ஊழியர் பயிற்சித் திட்டங்களின் வளர்ச்சி மற்றும் அமுலாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், அந்த மனித மூலதன மேம்பாட்டு நிறுவனம் 2023-ஆம் ஆண்டை விட 29 விழுக்காடு அதிகமாக அதாவது 2.27 பில்லியன் ரிங்கிட்டை விநியோகித்துள்ளது.
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், நிதித் திட்டங்களின் தாக்கத்தை அதிகப்படுத்துதல் போன்ற வியூக முயற்சிகளே, 2024 ஆம் ஆண்டில் இந்த மிகச் சிறந்த அடைவுநிலைக்குக் காரணம் என அது தெரிவித்தது.
இந்நிலையில், இந்த 2025-ஆம் ஆண்டிற்கான திட்டங்களில், பயிற்சி வழங்குநர்களுடனான பங்காளித்துவத்தை விரிவுபடுத்தும் அதே வேளை, நிதி உதவித் திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என அந்நிறுவனம் மேலும் விளக்கியது.


