ஷா ஆலம், மார்ச் 4 - ஆட்டிஸம் குறைபாடு கொண்ட தங்கள் மகனின்
பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக சுமத்தப்பட்ட வழக்கிலிருந்தும்
குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிக்கக் கோரி மறைந்த ஜைன் ரய்யான்
அப்துல் மத்தினின் பெற்றோர் செய்து கொண்ட மனுவை இங்குள்ள உயர்
நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஜைன் ராய்யானின் தந்தை ஜைம் இக்வான் ஜஹாரி (வயது 30) மற்றும்
தாயார் இஸ்மானிரா அப்துல் மானாப் (வயது 30) ஆகிய இருவரையும்
2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின் கீழ்
குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான முகாந்திரம் உள்ளதை நீதிமன்றம்
கண்டறிந்துள்ளதாக நீதிபதி ரோஸ்ஜியானாத்தி அகமது தனது தீர்ப்பில்
கூறினார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி எதிராக கொண்டு வரப்பட்டக்
குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்பதோடு
பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழக்கு
விசாரணையையும் ஒத்தி வைக்கும்படி அத்தம்பதியர் தங்களின் மனுவில்
கோரியிருந்தனர்.
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நாங்கள் வாசித்த போது அதில்
நாங்கள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த
தகவலும் இல்லை. குற்றச்சாட்டின் அடிப்படையில் எவ்வாறு எங்களைத்
தற்காத்துக் கொள்வது என்றும் தெரியவில்லை என்று நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த அப்பிடவிட்டில் அவர்கள் கூறியுள்ளனர்.
நாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாக எந்த தகவலும் குற்றச்சாட்டில் இல்லாத
காரணத்தால் எங்கள் வழக்கறிஞருக்கு எந்த உத்தரவையும் எங்களால்
பிறப்பிக்க இயலவில்லை என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அரசுத் தரப்பு எங்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள
குற்றச்சாட்டு என்ன என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதனால்
எங்களால் தற்காப்பு வாதத்தை தயாரிக்க முடியவில்லை என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.
ஆட்டிஸம் குறைபாடு கொண்ட தங்கள் மகனை பராமரிப்பதில் அலட்சியம்
காட்டியதாக ஜைன் ரய்யான் பெற்றோருக்கு எதிராக கடந்தாண்டு ஜூன்
மாதம் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.


