சிரம்பான், மார்ச் 4- இங்கு அருகில் உள்ள பண்டார் பாரு நீலாயில் உள்ள பேரங்காடி ஒன்றில் நேற்று நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் சம்பந்த பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இரு சந்தேக நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்த வேளையில் மற்றொரு ஆடவன் காரில் காத்திருந்ததாக நீலாய் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
பேரங்காடி ஒன்றில் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஒரு கும்பல் கொள்ளையிடுவதாக நம்பப்படும் சம்பவம் குறித்து ஒரு பெண்ணிடமிருந்து தனது துறைக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.
இக் கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு 8.36 மணிக்கு நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது ஒரு சந்தேக நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இக் கொள்ளைச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக கூறிய அவர், பறிபோன நகைகளின் மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இக் கொள்ளை தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் நீலாய் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை 06-7904222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் ஒரு பேரங்காடியில் உள்ள நகைக் கடையில் கொள்ளையிடுவதை சித்தரிக்கும் காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.


