புத்ராஜெயா, மார்ச் 4- மின்சார மற்றும் மின்னியல் கழிவுகளை சட்டவிரோதமான முறையில் பதனீடு செய்தது மற்றும் அழித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 1 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 61 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் நிறுவன உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் உள்பட 26 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குஷாரி யாஹ்யா கூறினார்.
நாங்கள் கைது செய்த அமலாக்க அதிகாரிகள் அந்த மின் கழிவு சேகரிப்பு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று நேற்று இங்குள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த சட்டவிரோத மின் கழிவு அழிப்பு மையங்களில் வேலை செய்து வந்த 420 அந்நிய நாட்டினரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் தெலுக் பங்ளிமா காராங் மற்றும் ஜோகூர் மாநிலத்தின் பூலோ காசாப்பில் இயங்கி வந்த 12 சட்டவிரோத மின் கழிவு அழிப்பு மையங்கள் மீது குடிநுழைவுத் துறையும் சுற்றுச்சூழல் துறையும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த நடவடிக்கை தொடர்பில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(பி)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


