புத்ராஜெயா, மார்ச் 3 - எந்தவொரு வெளித் தரப்பின் உத்தரவும் இன்றி, பெறப்பட்ட புகார்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரணையைத் தொடங்கியதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையம் சுயேச்சையாகச் செயல்படுகிறது. பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தொழில் ரீதியாகவும் நியாயமாகவும் விசாரணைகளை நடத்துகிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
எங்களுக்கு யாரிடமிருந்தும் எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. கிடைத்த தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் நாங்கள் சுயமாகச் செயல்பட்டோம் என்று அவர் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
'கெலுர்கா மலேசியா' திட்டத்தின் விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு நிதி செலவு மற்றும் கொள்முதல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பில் இஸ்மாயில் விசாரிக்கப்படுகிறார்.
இஸ்மாயிலுக்கு எதிரான இந்த விசாரணை 2009ஆம் ஆண்டு எம். ஏ.சி.சி.சட்டம் மற்றும் 2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடத்தப்படுகிறது.
இந்த நிதி மோசடியில் சம்பந்தப்பட்டதாக அல்லது பயனடைந்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் எம்.ஏ.சி.சி. முழுமையாக விசாரிக்கும் என்று அசாம் கூறினார்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாங்கள் அந்த திட்டம் தொடர்பில் (கெலுர்கா மலேசியா) மட்டுமின்றி, அதனால் பயனடைந்த அனைவரையும் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய நபரான இஸ்மாயிலின் முன்னாள் முதன்மை தனிச் செயலாளர் டத்தோ நஜிமா ஹாஷிம் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதையும் அஸாம் மறுத்தார். நஜிமா நாட்டில் இருப்பதையும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


