கோலாலம்பூர், மார்ச் 3 - கடந்தாண்டு 35,368 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இதன் விளைவாக 160 கோடி வெள்ளி நிதி இழப்பு ஏற்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் பதிவான 41,701 வணிகக் குற்ற வழக்குகளில் 84.5 விழுக்காட்டை இந்த எண்ணிக்கை குறிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு 34,495 ஆக இருந்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2024 இல் மூன்று விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் பதிவான 120 கோடி வெள்ளி இழப்புடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு காணப்படும் நிதி 29 விழுக்காடு அபரிமித அதிகரிப்பு கவலையளிக்கிறது என்று அவர் இன்று தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நடந்த வங்கி ஹீரோஸ் அங்கீகார நிகழ்வில் கூறினார்.
இந்தப் புள்ளிவிவரங்கள் நிதி ரீதியான பாதிப்பை மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஆழ்ந்த உளவியல் ரீதியான பாதிப்பையும் பிரதிபலிக்கிறது.
தாங்கள் சிக்க வைக்கப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணரும் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
மோசடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் மோசடி தகவல்கள் தொடங்கி அதிக வருமானத்தை உறுதியளிக்கும் போலி முதலீட்டுத் திட்டங்கள் வரை பெருகி வரும் மோசடிகள் கடுமையான அச்சுறுத்தலாக உருவாகியுள்ளன என்று ரம்லி கூறினார்.
மோசடிகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதோடு இதுபோன்ற குற்றங்களுக்கு பலியாவதிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த ஒத்துழைப்பு கடந்தாண்டு நாடு முழுவதும் 24,388 சோதனைகளுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக மோசடிகள் உட்பட வணிகக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25,829 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்பில் 16,813 வழக்குகள் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக தொடரப்பட்டன என ரம்லி மேலும் கூறினார்.


