புத்ராஜெயா, மார்ச் 3 - ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊழல் விசாரணையில் ஒன்பதாவது பிரதமர் சந்தேக நபராக இருப்பதை எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கில் அவர் (இஸ்மாயில் சப்ரி) ஒரு சந்தேக நபர் என்று நான் கூற முடியும், ஏனென்றால் முதலில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 36(1)வது பிரிவின் கீழ் சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடப்பட்டது.
இரண்டாவதாக, பணம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் தொடர்புடையவர்களில் அவரும் ஒருவர் எனும் பட்சத்தில் அப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அவரிடமிருந்து நாம் விளக்கம் பெற வேண்டும் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்படுவதாகவும் அவர் நாட்டை வழிநடத்தியபோது விளம்பர நோக்கங்களுக்காக நிதியை செலவழித்தது மற்றும் பெற்றது தொடர்பில் விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் எம்.ஏ.சி.சி.நேற்று கூறியிருந்தது.


