கோலாலம்பூர், மார்ச் 3 - காஜாங், பண்டார் டெக்னோலோஜி அருகே லோரி
ஓட்டுநர் ஒருவரை தங்கள் வாகனத்தில் மோதித் தள்ளிவிட்டு
தப்பியோடியச் சம்பவம் தொடர்பில் மூத்த குடிமக்களான கணவன்-
மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் தாயாரிடமிருந்து நேற்றிரவு 11.15
மணியளவில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து 73 மற்றும் 65
வயதுடைய அத்தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை 42 வயதான தனது மகன்
காரினால் மோதப்பட்டது தொடர்பில் அவரின் தாயார் போலீசில் புகார்
அளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தன்னை கார் ஒன்று மோதித் தள்ளிவிட்டதாகவும் அதன் காரணமாக
தம்மால நகர முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஆடவர் தன்
தாயாரைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனடியாக சம்பவ
இடத்திற்கு விரைந்த புகார்தாரர் தன் மகனை சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சேர்த்துள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை சித்தரிக்கும் வாகன டாஷ்கேம் காணொளி ஒன்று
பகிரப்பட்டதும் அந்த விசாரணையில் தெரிய வந்தது என்று அவர்
சொன்னார்.
இழுவை வாகனத்தின் ஓட்டுநர் ஒருவர் அந்த முதிய தம்பதியர் பயணம்
செய்ததாக நம்பப்படும் காரை தடுத்து நிறுத்த முயல்வதை அந்த
காணொளி சித்தரிக்கிறது.
தனது வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி சந்தேகப் பேர்வழி பின்னர்
வேகமாக செலுத்தி அந்த லோரி ஓட்டுநரை மோதித் தள்ளிவிட்டு அவர்
அங்கிருந்து தப்பியோடினார் என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307 மற்றும் 279வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


