ஜெம்போல், மார்ச். 3 - இல்லாத கடனுதவித் திட்டத்தை நம்பி இங்குள்ள
வங்கின் ஒன்றின் துணை நிர்வாகி 28,000 வெள்ளியை மோசடிக்
கும்பலிடம் பறிகொடுத்தார்.
ஐம்பத்தைந்து வயதுடைய அந்த துணை நிர்வாகி 30,000 வெள்ளியைக்
கடனாகப் பெறுவதற்கு வாட்ஸ்ஆப் மூலம் முகவர் ஒருவரைத் தொடர்பு
கொண்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
ஹூ சாங் ஹூக் கூறினார்.
கடன் விண்ணப்பம் மூன்றே நாட்களில் பரிசீலிக்கப்பட்டு விடும் என்றும்
அந்த விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கான கட்டணமாக 460 வெள்ளியை
செலுத்தும்படியும் அந்த துணை நிர்வாகி கேட்டுக் கொள்ளப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.
அந்த ஆடவரும் அந்த 460 வெள்ளித் தொகையை இணைய பரிவர்த்தனை
வாயிலாக சந்தேக நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் சந்தேகப்
பேர்வழியின் கோரிக்கையை ஏற்று அந்நபர் 28,112 வெள்ளி வரை
பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
சந்தேகப் பேர்ழி மேலும் 6,000 வெள்ளியைக் கோரியதைத் தொடர்ந்து
சந்தேகமடைந்த அந்நபர் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்றார்
அவர்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.


