கோலாலம்பூர், மார்ச் 3 - சந்தையில் உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தை சீர்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு அரிசி விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான மேம்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்குமாறு அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகப் பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருள் அபைடா கூறினார்.
இறைவன் அருளால் உள்ளூர் அரிசி விநியோகத்தை சீர்படுத்தும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில் துங்கு நஷ்ருல் கூறினார். இந்த விளக்கமளிப்பு இன்று அன்வார் இப்ராஹிம் மற்றும் மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அரிசி கொள்முதல் விலை அமைப்பு முறை, அரிசி உற்பத்தி செலவுகள் மற்றும் உள்ளூர் அரிசி உச்சவரம்பு விலை ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் காரணமாக உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக விவசாய அமைச்சை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், அரிசி கலக்கப்படுதைத் தடை செய்வது தொடர்பான குறிப்பிட்ட விதி 1994ஆம் ஆண்டு அரிசி மற்றும் நெல் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் (சட்டம் 522) இல்லாததும் இதற்குக் காரணம் என்று அமைச்சு கூறியது.


