போர்ட்டிக்சன், மார்ச். 3 - மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி
கடலில் விழுந்து உயிரிழந்தார். இச்சமபவம், இங்குள்ள ஜாலான் பந்தாய்
அருகிலுள்ள கம்போங் கெலாம் மீனவர் படகுத் துறையில் நேற்று
நிகழ்ந்தது.
பதினேழு வயதுடைய அந்த இளைஞரின் உடல் நேற்று பின்னிரவு 12.28
மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில்
கண்டுபிடிக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் மூத்த நடவடிக்கை கட்டளை அதிகாரி முகமது கமால்
முகமது திமார் கூறினார்.
அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதை மருத்துவப் பணியாளர்கள்
உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7.28 மணியளவில் அவசர
அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் தீயணைப்பு மற்றும்
மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் தெரிவித்தார்.
இந்த தேடுதல் நடவடிக்கையில் இரு அதிகாரிகள் உள்பட 23 தீயணைப்பு
வீரர்கள் பங்கு கொண்டனர். இக்குழுவினருக்கு உதவும் வகையில் தெலுக்
கெமாங் நீர் மீட்பு குழுவினரும் கடலோரத்தில் ரோந்துப் பணிகளை
மேற்கொண்டனர் என அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் பலியான மாணவர் லுக்குட்டில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் ஐந்தாம் படிவத்தில் பயின்று வந்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


