கோலாலம்பூர், மார்ச் 1- ஊழியர் சேம நிதி வாரியம் (இ.பி.எஃப்.) வழக்கமான சேமிப்புக்கு 6,305 கோடி வெள்ளியை உள்ளடக்கிய 6.30 விழுக்காட்டு லாப ஈவுத்தொகையையும் ஷரியா சேமிப்புக்கு 1,019 கோடி வெள்ளியை உட்படுத்திய 6.30 விழுக்காட்டு லாப ஈவுத் தொகையையும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த பகிர்வுத் தொகையின் மதிப்பு 7,324 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளதாக இ.பி.எஃப். தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஜூல்கர்னைன் ஒன் தெரிவித்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஊழியர் சேம நிதி வாரியத்தின் மொத்த முதலீட்டு வருமானம் 7,446 கோடி வெள்ளியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 2023 இல் பதிவான 6,699 கோடி வெள்ளியை விட 11 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் கூறினார்.
பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஆண்டுக்கான மதிப்பு குறைவை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு பெறப்பட்ட தொகை இதுவாகும் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற இ.பி.எஃப். 2024 விளக்கமளிப்பின் போது அவர் தெரிவித்தார்.


