புத்ராஜெயா, மார்ச் 1- ‘சிங்கா மடாணி‘ சின்னம் கொண்ட நாசி கண்டார் உணவகத் தொடர்களில் சீனி குறைவான அல்லது சீனி இல்லாத பானங்களுக்கு 30 காசு கழிவு வழங்க பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கம் முன்வந்துள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயிப் கூறினார்.
உள்ளுர் சமூகம் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடிப்பதற்கு ஏதுவாக சீனி குறைவான அல்லது சீனி இல்லாத பானங்களுக்கு வெ.1.80 விலையிலிருந்து 30 காசு கழிவு வழங்கப்பட்டு வெ.1.50 என்ற விலையில் விற்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சமூகத்திற்கும் நாட்டிற்குமான தங்களின் நிறுவன சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இந்நடவடிக்கை அமைகிறது என இங்குள்ள லீகா மாஜூ நாசி கண்டார் உணவகத்தில் நடைபெற்ற சிங்கா மடாணி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிங்கா மடாணி தகட்டில் தனது கையெழுத்தைப் பதித்து இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் மையமாக விளங்கும் காரணத்தால் இந்த சிங்கா மடாணித் திட்டத்தை இந்த உணவகத்தில் தாங்கள் தொடக்கியதாக ஜவஹார் சொன்னார்.


