புத்ராஜெயா, மார்ச் 1 — வரி செலுத்துவோர் 2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி படிவத்தை (ஆர்.எஃப்.) இன்று முதல் இ-பைலிங் எனும் மின்-தாக்கல் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று உள்நாட்டு வருமான வாரியம் (எல்.எச்.டி.என்.) தெரிவித்துள்ளது.
இந்த இணையம் வழி வரி மதிப்பீட்டு தாக்கல் சேவை மை டெக்ஸ் (MyTax) அல்லது எல்.எச்.டி.என். (LHDN) அகப்பக்கம் வழியாக வழங்கப்படுகிறது என்று வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது .
மை டெக்ஸ்(MyTax ) அகப்பக்கத்தில் உள்ள வருமான வரி முகவர் இணைய தாக்கல் அமைப்பு தளத்தைப் பயன்படுத்த வரி முகவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அது கூறியது.
வரி செலுத்துவோர் MyTax அகப்பக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொடர்புடைய பங்கை உறுதி செய்ய வேண்டும். இதன் வழி அவர்கள் இணையத் தாக்கல் மூலம் வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.
வரி செலுத்துவோர் தங்களின் மாதாந்திர வருமான அறிக்கைகள், ரசீதுகள், இன்வாய்ஸ் மற்றும் வரி தொடர்பான பிற ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கள் கடவுச் சொல் தொடர்பான விவரங்களை மறந்துவிட்டவர்கள் MyTax அகப்பக்கத்தின் வாயிலாக அத்தகவல்களை மீட்டெடுக்கலாம் என்று வருமான வரி வாரியம் தெரிவித்தது.
புதிய கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான இணைப்பு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
வரி செலுத்துவோர் வருமான வரி திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வருமான வரி வாரியத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வழியாகப் பெறலாம். இத்தகவல் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது.


