புத்ராஜெயா, மார்ச் 1- ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்ளூர் செய்தி இணைய ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி.) சிலாங்கூர் மாநிலப் பிரிவு ஷா ஆலமில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்றிரவு சுமார் 11.00 மணியளவில் கைது செய்தது.
அந்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ஊழல் வழக்கு தொடர்பானது என்றும் அவர் எழுதிய எந்த செய்தி தொடர்பானதும் அல்ல என்றும் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
புலம்பெயர்ந்தோர் கடத்தல் குறித்த கட்டுரையை வெளியிடாமலிருப்பதற்காக பத்திரிகையாளர் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் முகவரிடம் 20,000 கோரியதாக நம்பப்படுகிறது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
அந்த பத்திரிகையாளர் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16வது பினிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே, தனது பத்திரிகையாளர்களில் ஒருவரை எம்.ஏ.சி.சி. கைது செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட இணையதளம் இன்று
செய்தி வெளியிட்டுள்ளது.


