ஷா ஆலம், மார்ச் 1- வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என்பதை கடசியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சித் தேர்தலில் தாம் தற்போது வகித்து வரும் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.
யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் வேண்டுமானாலும் தங்களை முன்னிலைப்படுத்தலாம். ஆனால் இந்த நோன்பு காலத்தின் போது உங்கள் வரம்பை, நடத்தையை, வார்த்தைகளை கவனத்தில் கெள்ளுங்கள் என அவர் குறிப்பிட்டார்.
ஆகவேதான், சிலாங்கூர் வலுவுடன் இருப்பதை உறுதி செய்ய நமது சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கிறேன். சிலாங்கூர் ஒன்றுபட்டு நிற்பது நிரூபணமானால் மற்ற மாநிலங்களும் ஒன்றுபட்டு நிற்கும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் 100 விழுக்காட்டு பிளவுபடாத ஆதரவைப் பெற்றிருப்பார் என அவர் தெரிவித்தார்.
அந்த இலக்கை அடைவதற்காக தூபமிடும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம். துணைத் தலைவர் என்ற முறையில் ரபிஸியிடமிருந்தும் உதவித் தலைவர் என்ற முறையில் என்னிடமிருந்தும் பிரதமர் அன்வார் ஆதரவைப் பெறுவார் என நான் எதிர்பார்க்கிறேன். அன்வார் இரண்டாவது தணைக்கும் பிரதமராக நீடிக்கும் வகையில் நாம் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்பதோடு முன்னோக்கியும் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று இங்கு நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் தொகுதி, மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.


