ஷா ஆலம், பிப். 28- அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் 2026 மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலம்பம், மின்-விளையாட்டு மற்றும் சதுரங்கம் ஆகிய போட்டிகளைச் சேர்ப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
எனினும், இந்த பரிந்துரைக்கு மாநில விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.என்.) அனைத்து இயக்குநர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் இதன் தொடர்பான இறுதி முடிவு வரும் ஆகஸ்டு மாதத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹிலிம் கூறினார்.
நேற்று, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுக்மா சிலாங்கூர் திட்டங்களை நாங்கள் முன்வைத்தோம். அதே சமயம், கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கு அனுமதியும் கோரினோம். சுக்மா விதிகளின் படி போட்டி நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே பரிந்துரையை முன்வைக்க வேண்டும். ஆகவே, வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் இது குறித்து அறிவிப்போம் என்றார் அவர்.
இந்த போட்டியில் 28 பிரதான விளையாட்டுகள் இடம் பெறுவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும் பல தரப்பினரின் கருத்துகளைப் பெற வேண்டியுள்ளதால் புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. ஆகவே, அனைத்து இயக்குநர்களும் அடுத்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதிப்பார் என அவர் சொன்னார்.
சுக்மா போட்டியில் இந்த மூன்று விளையாட்டுகளும் சேர்க்கப்பட வேண்டும் என சிலாங்கூர் விரும்புகிறது. இந்த மூன்று விளையாட்டுகளிலும் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


