கோலாலம்பூர், பிப். 28- பாதுகாப்புப் படையினரை எதிர்க்கும்படி மலேசியர்களைத் தூண்டும் காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் பதிவேற்றப்பட்டது தொடர்பில் போலீசார் விசாரணைக் அறிக்கையைத் திறந்துள்ளனர்.
அந்தக் காணொளி தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடமிருந்து தமது துறைக்கு புகார் கிடைத்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா தெரிவித்தார்.
இப்புகார் தொடர்பில் புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) ஆம் பிரிவு, தண்டனைச் சட்டத்தின் 505(சி) பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
அந்த 29 வினாடிகள் கொண்ட டிக் டோக் காணொளி அதன் கணக்கு உரிமையாளர் ஒருவரால் பதிவேற்றப்பட்டது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் அந்த உள்நாட்டு ஆடவர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட மக்களைத் தூண்டுவதை அந்த காணொளி சித்தரிக்கிறது.


