ஷா ஆலம், பிப். 27- ரமலான் மாதத்தில் அரசு ஊழியர்கள் விரைவாக வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்குவது குறித்து சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக உள்ளது.
இந்த பரிந்துரை விரைவில் மாநில ஆட்சிக் குழுவில் விவாதிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மாநில ஆட்சிக்குழுவில் அது குறித்து விவாதிப்போம். ஆனால் இதுவரை நாங்கள் நிர்ணயித்த நேரம் அவர்கள் வேலை செய்து வீடு திரும்புவதற்கு போதுமானது என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் இலகுவான நேரத்தை பரிசீலித்து வருகிறோம். அவர்கள் சீக்கிரமாக புறப்பட்டால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சீக்கிரமாக வேலைக்கு வர வேண்டும். இதன் வழி உணவு தயாரிப்பது போன்ற பொறுப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக அவர், இங்குள்ள எஸ்.ஏ.சி.சி வளாகத்தில் 11வது சிலாங்கூர் ரமலான் பண்டிகையின் (ஃபெஸ்டிரா25) தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.) தலைமை அதிகாரி டத்தோ மாமுட் அப்பாஸ் மற்றும் சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த ரமலான் மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2.00 மணிக்குள் மாநிலத்தில் உள்ள பெண் அரசு ஊழியர்கள் வீடு செல்ல நெகிரி செம்பிலான் அரசு அனுமதித்தது.
நெகிரி செம்பிலான் தவிர, பகாங் அரசும் ரமலான் மாதம் முழுவதும் வெள்ளிதோறும் அரசு ஊழியர்களுக்கான வேலை நேரத்தை முன்னதாகவே அதாவது மதியம் 12.30 மணிக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளது.


