NATIONAL

உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த 600,000 தேங்காய்கள் இறக்குமதி

27 பிப்ரவரி 2025, 8:48 AM
உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த 600,000 தேங்காய்கள் இறக்குமதி

புத்ராஜெயா, பிப். 27- உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம்

போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 14 லட்சத்து 50 ஆயிரம்

வெள்ளி மதிப்பிலான 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு

பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.

அந்த தேங்காய்கள் டெங்கிலில் உள்ள ஃபாமா எனப்படும் கூட்டரசு

விவசாயப் பொருள் சந்தை வாரியத்தின் நடவடிக்கை மையம், செனாவாங்

ஃபாமா நடவடிக்கை மையம் மற்றும் பேராக் மாநிலத்தின் சிம்பாங் பூலாய்

ஃபாமா நடவடிக்கை மையம் ஆகியவற்றில் சேமித்து

வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த தேங்காய்கள் நாடு முழுவதும் உள்ள 42 ஃபாமா நடவடிக்கை

மையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். பின்னர் அவை ஃபாமா சில்லரை

மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு சந்தையில்

போதுமான அளவு தேங்காய்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

நாட்டில் தேங்காய் விநியோகம் நிலைத்தன்மை பெறும் வரை இந்த

நடவடிக்கை தொடரும் என்று அமைச்சு குறிப்பிட்டது. இந்தோனேசியா,

தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து இந்த தேங்காய்கள் இறக்குமதி

செய்யப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

தேங்காய்ப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு நீண்ட கால அடிப்படையில்

தீர்வு காணும் முயற்சியாக தென்னை மறுநடவு மற்றும் 12வது

மலேசியத் திட்டத்தின் கீழ் புதிய நடவுத் திட்டங்களை அமல்படுத்தும்

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக மாநில

அரசுகளின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணப்பட்ட இடங்களில்

தென்னை பயிரீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 43 திட்டங்கள் வாயிலாக

643.42 ஹெக்டர் பரப்பளவில் 123,426 தென்னங் கன்றுகளை எல்.பி.பி.

எனப்படும் தோட்ட அமைப்பு வாரியம் நடவு செய்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.