கிள்ளான், பிப். 27- இங்குள்ள ஜாலான் தெங்கு கிளானா வட்டாரத்திலுள்ள ஏழு பல்பொருள் விற்பனை மையங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடை வளாகங்களில் நேற்று அதிரடிச் சோதனையை கிள்ளான் அரச மாநகர் மன்ற சுகாதாரப் பிரிவினர் நடத்தினர்.
இச்சோதனையின் போது பதப்படுத்தப்பட்ட/பேக்கேஜ் செய்யப்பட்ட, உண்பதற்கு தயார் நிலையிலுள்ள உணவுகள் நெளிந்துபோன மற்றும் துருப்பிடித்த கலங்களிலும் காலாவதியான நிலையிலும் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த குற்றங்கள் தொடர்பில் உணவு பறிமுதல் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மதிப்பு 413.69 வெள்ளியாகும்.
விற்பனை செய்யப்படும் பொருட்கள் பயனீட்டாளராகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருப்பதை எப்போதும் உறுதி செய்யுமாறு வர்த்தகர்களுக்கு மாநகர் மன்றம் அறிவுறுத்தியது.


