ஜோர்ஜ் டவுன், பிப். 27- இங்குள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் பணியிடத்தில் நேற்று
தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மருத்துவ அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனை தரப்பிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து 43 வயதான அந்த அரசு பணியாளர் நேற்றிரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது தெரிவித்தார்.
மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட அந்த நபர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 மற்றும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மார்ச் 2 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை வந்த 20 வயதுடைய ஒரு பெண் நோயாளியை ஏமாற்றி அவருக்கு எதிராக தகாதச் செயலை அம்மருத்துவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.


