புத்ராஜெயா, பிப் 27 - பாதுகாப்பு மற்றும் தற்காப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ரஷ்ய பாதுகாப்பு மன்றச் செயலாளர் செர்ஜி ஷோய்கு இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ராவிற்கு காலை 10.15 மணியளவில் வந்த ஷோய்குக்கு அரச ரேஞ்சர் படைப்பிரிவின் முதலாவது பட்டாளத்தின் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பு நல்கப்பட்டது. மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் நெயில் லாட்டிபோவும் அப்போது உடனிருந்தார்.
கடந்தாண்டு பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் அன்வார், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புடினுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவின் எட்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக ரஷ்யா இருந்தது. மொத்த இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 15.6 சதவீதம் அதிகரித்து 1,422 கோடி வெள்ளியாக உயர்ந்தது. கடந்த 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,230 கோடி வெள்ளியாக இருந்தது.


