NATIONAL

ஆண்டுதோறும் புதிதாக 10,000 பேருக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை - சுகாதார அமைச்சு

27 பிப்ரவரி 2025, 5:11 AM
ஆண்டுதோறும் புதிதாக 10,000 பேருக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை - சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், பிப் 27 - நாட்டில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் சிறுநீரக பாதிப்பு அல்லது கோளாறினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 2023ஆம் ஆண்டில் சிறுநீரக கோளாறினால் 50,000 பேர் வரை இரத்த சுத்திகரிப்பு செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 60,000-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் தரவுகள் காட்டுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் புதிதாக பத்தாயிரம் பேர் வரை இரத்த சுத்திகரிப்பு செய்து கொள்கின்றனர் என்றால், எதிர்வரும் 2040ஆம் ஆண்டில், நாட்டு மக்கள் தொகையில் 15.5 விழுக்காடு அதாவது 50 லட்சம் பேர் இரத்த சுத்திகரிப்பு செய்ய நேரிடும் என்று சிறுநீரக நிபுணர் டாக்டர் ரவி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சிறுநீரக பாதிப்புக்கான தொடக்கக்கட்ட அறிகுறி பற்றி பலரும் அறிந்திருக்காத நிலையில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டுமே அதன் தொடர்பில் முன்னமே தெரிய வருகிறது. மற்றவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது நிலையைக் கடந்து விட்ட பின்னரே சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதை உணர்வதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 28 பேரின் சிறுநீரகங்கள் நிரந்தரமாகச் செயலிழந்து அவர்கள் இரத்த சுத்திகரிப்பு செய்யும் நிலைக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டார்.

''சிறுநீரகம் பாதிப்படைவதற்கு முதல் முக்கிய காரணம் நீரிழிவு நோயாகும். உலக அளவில் அதிகப்படியான நீரிழிவு நோய் கொண்டவர்களின் வசிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் அறிய வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களையும் இந்நோய் பெருமளவில் பாதிக்கின்றது. எனவே, இவை இரண்டையும் கட்டுப்பாடாக வைத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

அதேவேளையில், இந்நோயிலிருந்து விடுபடுவதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பின்னர் மாமிச வகைகளைக் குறைத்து காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

அதேவேளையில், ஆண்டுக்கு இரு முறையேனும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.