கோலாலம்பூர், பிப். 27 - கடந்த 2017 முதல் 2023ஆம் ஆண்டு வரை நாட்டில்
சுமார் 250,000 புற்றுநோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த நோய்
காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது கூறினார்.
மார்பகம், பெருங்குடல், நுரையீரல், லிம்போமா மற்றும் கல்லீரல்
ஆகியவையே ஐந்து உறுப்புகள் சம்பந்தப்பட்ட புற்றுநோய்களால்
அதிகமானோர் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நோய் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு 13 விழுக்காட்டு மரணங்கள்
பதிவான வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 14 விழுக்காடாக
உயர்வு கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிக மரணங்களுக்கான மூன்றாவது காரணமாக புற்றுநோய்
விளங்குகிறது. இந்த எண்ணிக்கைக்கு மத்தியிலும் நம்பிக்கை
இருக்கத்தான் செய்கிறது. தடுப்பு, முன்னதாக பரிசோதனை செய்வது,
உரிய சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைகளைப்
பொறுத்து இந்த நம்பிக்கை அமைகிறது.
நாட்டில் மருத்துவத் துறையில் சீர்திருத்தத்தை அமல் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியில் இதுவே முக்கிய இலக்காக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு அனுசரிக்கப்பட்ட ‘தனித்துவத்தில் ஒற்றுமை‘ எனும்
கருப்பொருளிலான 2025 ஆம் ஆண்டு தேசிய நிலையிலான அனைத்துலக
புற்றுநோய் தின நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்
கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு நடைபெறும் உலக சுகாதார மாநாட்டில்
நுரையீரல் சுகாதாரம் தொடர்பான தீர்மானத்தை மலேசியா கொண்டு
வரும் என்றும் ஜூல்கிப்ளி தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இதர 14 நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் முன்மொழியப்படும் என அவர் சொன்னார்.
நுரையீரல் சுகாதாரத்தை உலக சுகாதாரத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக
ஆக்கும் மலேசியாவின் நோக்கத்திற்கு ஏற்ப இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


