கோலாலம்பூர், பிப். 27- ஷா ஆலம் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் இதரப்
பகுதிகளை இணைக்கும் இலகு ரயில் டிரான்சிட் சேவை வரும் செப்டம்பர்
மாதம் 30ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை அதன் குத்தகையாளர் வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி
பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திடம் முழுமையாக
ஒப்படைத்தப் பின்னர் பயணச் சேவை தொடங்கப்படும் என்று
போக்குவரத்து அமைச்சு கூறியது.
அத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இதுவரை 98.16 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ளதாக அத்திட்ட மேம்பாடு தொடர்பில்
நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு கூறியது.
அமைச்சின் இந்த பதில் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
எல்.ஆர்.டி.3 சேவை பயணிகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி
செய்ய பயணிகள் இல்லாத பரீட்சார்த்த பயணச் சேவை இரு
கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
இந்த பரீட்சார்த்த பயணச் சேவை 75 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்.
இந்த சோதனை அடிப்படையிலான பயணச் சேவை தொடர்பான முடிவை
பாதுகாப்பு, தர நிர்ணயம், இரயில் செயல்முறை உத்தரவாதம்
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தரை போக்குவரத்து நிறுவனம்
(அபாட்) மதிப்பீடு செய்யும்.
எல்.ஆர்.டி.3 திட்டத்தின் சமீபத்திய மேம்பாடு, பயணிகள் இல்லாத
பரீட்சார்த்த பயண சோதனை காலம் மற்றும் பயணச் சேவை
தொடங்கப்படும் காலக்கட்டம் குறித்து ஷா ஆலம் தொகுதி பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் அஸ்லி யூசுப் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு
இந்த பதிலை வழங்கியது.
சோதனை அடிப்படையிலான பயணம் வரும் ஏப்ரல் மாத மத்தியில்
தொடங்கி ஜூன் மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு
கூறியது.


