மலாக்கா, பிப். 27- படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதி
நேரப் பாடகியின் உடலில் 14 கத்திக் குத்து காயங்கள் இருப்பது
சவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் உடல் மாலிம்,
செக்சன் 1, தாமான் ஸ்ரீ மாங்காவில் உள்ள வீடொன்றில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.
மலாக்கா மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை உடற்கூறு
நிபுணர்கள் நடத்திய சவப்பரிசோதனையின் முழுமையான அறிக்கையை
போலீசார் பெற்றுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி கிறிஸ்டோபர் பாதிட் கூறினார்.
கொல்லப்பட்டவரின் உடலில் 14 கத்திக் குத்து காயங்கள் இருந்தன.
அக்காயங்களில் ஐந்து முகத்தில் காணப்பட்ட வேளையில் நெஞ்சில் ஐந்து
காயங்களும் கைகளில் ஐந்து காயங்களும் கணுக்காலில் ஒரு காயமும்
காணப்பட்டது என்று அவர் சொன்னார்.
இருதயத்தில் ஏற்பட்ட ஆழமாக கத்திக் குத்து காயம் காரணமாக இரத்த
நாளங்கள் துண்டிக்கப்பட்டு இரத்தக் கசிவு ஏற்பட்டதால் மரணம்
சம்பவித்தது என்று என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சவப்பரசோதனை நடத்தப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர்
அப்பெண் மரணமடைந்ததையும் உடற்கூறு நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்
என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த படுகொலை தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.
தாமான் மாங்காவில் உள்ள வீடொன்றில் பெண்மணி ஒருவர் கத்திக்
குத்து காரணமாக இரத்த வெள்ளத்தில் கட்டில் மீது கிடந்தது கண்டு
பிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


