ஷா ஆலம், பிப். 27- அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதியுதவியை (பி.கே.கே.) அதிகரிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
பி.கே.கே.2.0 உதவித் தொகையை வெகு விரைவில் வழங்குவதற்கு ஏதுவாக இவ்விவகாரம் மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரிலுள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத் தொகையை உள்ளடக்கிய பி.கே.கே. நிதியுதவி வரும் மார்ச் 25ஆம் தேதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மாநில அரசு அங்கீகரிக்கும் அல்லது அமல்படுத்தும் என்று அவர் சொன்னார்.
நான் அனைவருடன் பகிர்ந்து கொள்வதற்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. பி.கே.கே. உதவித் தொகை தவிர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் பெருநாள் பண அன்பளிப்பை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மாநிலத்திலுள்ள அனைத்து முஸ்லீம்களுக்கு புனித ரமலான் மாத மற்றும் நோன்பு வாழ்த்துகளை அமிருடின் தெரிவித்துக் கொண்டார்.
இரண்டு மாத சம்பளத்தை உள்ளடக்கிய பி.கே.கே. 2024 கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி பெசார் கூறியிருந்தார்.
முதல் கட்ட பி.கே.கே. தொகை கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி வழங்கப்பட்ட வேளையில் இரண்டாம் கட்டத் தொகை நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி வழங்கப்படும்.


