ஷா ஆலம், பிப். 27- திறன்மிக்கத் தொழிலாளர்களை வலுப்படுத்துவது நீடித்த மனிதவளத்திற்கு அவசியமாகும். அதே நேரத்தில் திறன் மேம்பாட்டை எளிதாக எடுத்துக்கொள்வது நீண்ட கால இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
மாநிலத்தில் புதுமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் திறன் இடைவெளி, திறன் பொருத்தமின்மை மற்றும் வியூக மாற்றுத் திட்டம் இல்லாதது ஆகியவற்றுடன் இந்த மனிதவளப் பிரச்சினையையும் பல ஸ்தாபனங்கள் எதிர்கொள்கின்றன என்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) வியூகத் திட்டமிடல் பிரிவின் தலைமை பொது நிர்வாகி கூறினார்.
(இன்றைய ஆய்வரங்கு) பல்வேறு தொழில்கள் மற்றும் பணியாளர்களின் மனித மூலதனத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகளை, குறிப்பாக திறமையான தொழிலாளர்கள் குறித்து முக்கிய தலைப்புகளில் ஆய்வுகளை நடத்தும்.
மாற்றுத் திட்டமிடலில் வியூகச் சிந்தனை மிகவும் முக்கியமானது. இன்றைய குழு உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள் என்று மாபிசுல் ருஸிடின் அப்துல் ரஷிட் கூறினார்.
நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற "செயலில் தலைமைத்துவம்: மாற்றத்தின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மனித மூலதனம்" என்ற ஆய்வரங்கில் ஆற்றிய தொடக்க உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேகமாக மாறிவரும் சூழலில் மாற்றத்திற்கான முக்கிய அடித்தளமாக மனித மூலதனம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் மனித மூலதனம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று புதுமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் திறமை இல்லாதது. இதில் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. அது தொடர்ந்து விரிவடைந்தால் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் பின்தங்கி விடும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.


