கோலாலம்பூர், பிப் 26 - சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய விதிமீறல்கள் இருந்தால் பெரிய நிறுவனங்கள் உட்பட குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை போக்குவரத்து அமைச்சால் எடுக்கப்படும்.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததால் மலேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உரிமம் அண்மையில் ரத்து செய்யப்பட்டதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.
ஒரு நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக அல்லது முழுமையாக இரத்து செய்யப்படும்போது, அந்நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் இயங்க முடியாது என்று அந்தோணி லோக் விளக்கினார்.
''அதிக சுமை கொண்ட கனரக வாகனங்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகள், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளைக் கடுமையாக்குதல், தொழில்துறை நிறுவனங்களிடையே ஐ.சி.ஒ.பி செயலாக்கத்தை மேம்படுத்துதல் உட்பட சாலைப் பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற வலுவான நடவடிக்கைகளை அமைச்சு தொடரும்,'' என்றார்.
கனரக வாகனங்கள், குறிப்பாக லாரிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்புடைய சாலை விபத்துகளை குறைக்க அமைச்சு மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கை குறித்து ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சுல்கஹார் முஹமட் டெலி எழுப்பிய கேள்விக்கு லோக் அவ்வாறு பதிலளித்தார்.
2019-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2024 நவம்பர் மாதம் வரை, லாரிகளை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1457 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


