நீலாய், பிப். 26 - இங்குள்ள ஜாலான் பெர்சியாரான் நீலாய் பகுதியில் இன்று நிகழ்ந்த இரு லோரிகள் உட்பட நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் தொழில்நுட்பர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை 7.25 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பண்டார் என்ஸ்டெக் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த 23 வயதுப் பெண் பலியானதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.
சிலாங்கூர், பூச்சோங்கைச் சேர்ந்த 34 வயது நபர் ஓட்டிச் சென்ற வோல்வோ லோரி கட்டுப்பாட்டை இழந்து பாதிக்கப்பட்ட பெண் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகாவின் காரின் பின்புறத்தில் மோதியதாக அவர் சொன்னார்.
இந்த மோதலின் விளைவாக அக்கார் முன்னோக்கி நகர்ந்து 59 வயது நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் வாஜா காரின் பின்புறத்தில் மோதியதோடு முன்னால் இருந்த நிசான் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது என்று அவர் கூறினார்.
இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அதே சமயம் புரோட்டான் வாஜா ஓட்டுநர் லேசான காயங்களுக்கு ஆளானார். அவர் சிகிச்சைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் காயமடையவில்லை எனக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.


