ஷா ஆலம், பிப். 26 - சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க அதிக சரக்குகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் சரக்கு போக்குவரத்து நிறுவன உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் ப 57(3) வது பிரிவின் கீழ் நிறுவன நடத்துநர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளில் வாகன உரிமம் ரத்து, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஆகியவையும் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
அதிகப்படியான சுமைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்ற ஆணித்தரமான செய்தியை போக்குவரத்து நிறுவன நடத்துநர்களுக்கு அனுப்பும் வகையில் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் மட்டுமல்ல, சரக்கு உரிமையாளர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு கொள்கையை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இதற்கு மேலும் அவர்கள் தங்கள் வாகனங்களில் அதிக சரக்குகளை கொண்டு செல்ல அனுமதித்தால் உரிய தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிகப்படியான சுமைகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து நிறுவன நடத்துநர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து ஜெம்போல் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ சம்சுல்கஹார் முகமது டெலி எழுப்பிய கேள்விக்கு லோக் இவ்வாறு பதிலளித்தார்.
போக்குவரத்து பாதுகாப்புக்கான தொழில்துறை நடைமுறை விதிகள் தொடர்பான தணிக்கையில் தோல்வி மற்றும் விபத்துக்களை ஏற்படுத்துவது அல்லது அதன் தொடர்புடைய தவறுகள் காரணமாக கடந்தாண்டு 247 நடத்துநர்களின் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.


