ஷா ஆலம், பிப். 26 - கிள்ளான் ஆற்று துப்புரவுப் பணித் திட்டம் தொடர்பில்
அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கோரி
கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர்
வெளியிட்ட அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாக டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
இந்த மன்னிப்பைத் தொடர்ந்து முகமது சனுசி சம்பந்தப்பட்ட சர்ச்சை
முடிவுக்கு வருவதோடு சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமலிருப்பதை
உறுதி செய்ய கருத்துகளை வெளியிடும் போது அனைத்துத் தரப்பினரும்
கவனமுடன் இருக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர்
கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையின் முதல் நாளான இன்று பிரதிவாதியை
நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரும்படி கேட்டுக் கொள்வதன் மூலம்
இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் முடிவெடுத்தோம்.
அனைத்து தரப்பினரும் கருத்துகளை வெளியிடும் போது கவனமுடன்
இருக்க வேண்டும் என்பதோடு சமூகத்தில் குழப்பம் ஏற்படுவதையும்
தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார்.
மன்னிப்பு கோரினால் போதுமானது என்ற எனது கோரிக்கைக்கு ஏற்ப இந்த
வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. நான் கேட்டது மன்னிப்புதான். அதுவும்
கிடைத்து விட்டது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.
சனுசி சுமத்திய குற்றச்சாட்டில் வலுவான ஆதாரம் இல்லை என்பது
நீரூபணமாகி விட்டது குறித்து நான் மனநிறைவு கொள்கிறேன் என்று
அவர் சொன்னார்.
அவதூறான செய்தியை வெளியிட்டதற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு
கோர வேண்டும் என்பதோடு இழப்பீடாக ஒரு கோடி வெள்ளியும் வழங்க வேண்டும் எனக் கோரி அமிருடினின் வழக்கறிஞர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி சனுசியிடம் மனுவை சார்பு செய்திருந்தனர்.
கிள்ளான் ஆற்றை சுத்தப்படுத்துவது தொடர்பான 1,000 கோடி வெள்ளி திட்டத்தில் அமிருடினும் தொழிலதிபரான வின்சென்ட் டானும் ஊழல் புரிந்துள்ளதாக மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது சனுசி குற்றஞ்சாட்டியிருந்தார்.


