கோலாலம்பூர், பிப். 26 - கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மெனாரா
கினாபாலு எதிரே நடைபெற்ற இரு பேரணிகள் தொடர்பில் போலீசார் இரு
விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர். எனினும், இதன் தொடர்பில்
ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் கொண்டு
வரப்படவில்லை.
சபா மாநிலத்தின் 11வது ஆளுநரின் நியமனத்தை எதிர்த்தும் ஆதரித்தும்
இரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
இந்த பேரணி தொடர்பில் முன்கூட்டியே முழுமையான தகவலை
வழங்கத் தவறியது தொடர்பில் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி
சட்டத்தின் 9(சி) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த
பேரணி தொடர்பான விசாரணை அறிக்கை சபா மாநில சட்டத் துறை
அலுவலகத்திடம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது என்று
அவர் சொன்னார்.
அவ்விரு பேரணி ஏற்பாட்டாளர்களுக்கும் எதிராக வழக்கை
தொடர்வதில்லை என சட்டத் துறை தலைவர் அலுவலகம் முடிவு
செய்துள்ளது. அந்த முடிவை போலீஸ் துறை ஏற்றுக் கொண்டுள்ளது
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் போலீசார் நியாயமான முறையில் விசாரணை
நடத்தியதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
எந்த சட்ட வழக்கையும் தொடங்குவது, நடத்துவது அல்லது கைவிடுவது
சட்டத் துறை தலைவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தின் 254வது பிரிவு மற்றும் அரசியலமைப்புச்
சட்டத்தின் 145(3) ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர்
தெரிவித்தார்.
கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச்
சட்டத்தின் 10வது விதிக்கு ஏற்ப 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச்
சட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் திருத்தங்களைச் செய்யவும்
அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.


