ஜோகூர் பாரு, பிப். 26 - கடல் அலையில் அடித்து வரப்பட்ட படகு கரையை
மோதியதில் அதில் பயணித்த மூன்று வெளிநாட்டினர் பரிதாபமாக
உயிரிழந்தனர். இச்சம்பவம் இங்குள்ள பந்தாய் தஞ்சோங் லங்காட்டில்
நேற்று நிகழ்ந்தது.
கடந்த திங்கள்கிழமை இரவு 11.18 மணியளவில் பைபர்கிளாஸ் படகில்
மாசாய் நகர் நோக்கிச் சென்ற கோத்தா திங்கி, பெல்டா செமென்ச்சுவிலுள்
நிறுவனம் ஒன்றின் மூன்று பணியாளர்களே பாதிக்கப்பட்டவர்களாவர்
என்று தீயணைப்புத் துறையின் உதவி ஆணையர், நடவடிக்கை கமாண்டர்
சர்ஹான் அக்மால் முகமது கூறினார்.
அவர்கள் பயணம் செய்த படகு கரையோரம் ஒதுங்கிக் கிடப்பதை
மீனவர்கள் கண்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள்
காணாமல் போனதை அந்நிறுவனத்தினர் உணர்ந்து போலீசில் புகார்
செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சுக்லால் எனும் நேப்பாள பிரஜையின் உடல் நேற்றிரவு 12.19
மணியளவில் சாங்கி கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதை சிங்கப்பூர்
கடலோர காவல் துறையினர் உறுதிப்படுத்தினர் அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாசீர் கூடாரங் தீயணைப்பு
நிலையத்திலிருந்து மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கெபாயான் தஞ்சோங் லங்சாட் மற்றும் அருகிலுள்ள படகுத் துறை
பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பூலாவ்
தேக்கோங் அருகே மற்றொரு நேப்பாளியான கலாம் ராம் பாஹ்துரின்
உடலை சிங்கை கடலோர காவல் துறையினர் காலை 11.00 மணிக்கு
கண்டு பிடித்தனர் என்றார் அவர்.
இந்தோனேசியரான மூன்றாவது நபரின் உடல் மாலை 3.34 மணிக்கு
போர்ட் பார்க் தஞ்சோங் லங்காட் படகுத் துறையிலிருந்து 50 மீட்டர்
தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.


