ஜோர்ஜ் டவுன், பிப். 26 - பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட
அதிரடிச் சோதனையில் பெண்மணி ஒருவர் உள்பட எழுவர் கைது
செய்யப்பட்டதன் மூலம் வீடு புகுந்து கொள்ளையிடும் கும்பல் ஒன்றை
போலீசார் வெற்றிகரமாக முறிடியத்துள்ளனர்.
இருபது முதல் முப்பது வயது வரையிலான அந்த எழுவரும் தீமோர்
லாவுட் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாயான் லெப்பாஸ்
குற்ற விசாரணைப் பிரிவு உறுப்பினர்கள் மேற்கொண்ட சிறப்பு அதிரடி
நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பாராட் டாயா மாவட்டபோலீஸ்
தலைவர் ஏசிபி சுஸாலீ ஆடாம் கூறினார்.
நேற்று அதிகாலை இங்குள்ள ஆர்பன் சூட் குடியிருப்பில் உள்ள 24 வயது
ஆடவருக்குச் சொந்தமான வீட்டில் மடிக்கணினி கைப்பேசி மற்றும்
முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
பாயன் லெப்பாஸ், புக்கிட் மெர்தாஜம், பட்டர்வெர்த் உள்ளிட்ட இடங்களில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த எழுவரும் கைது செய்யப்பட்டனர்
என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.
கைது செய்யப்ப்ட்ட ஆடவர்களிடம் நடத்தப்பட்டச் சோதனையில்
மடிக்கணினி, கைபேசி, கேமரா உள்ளிட்ட திருட்டுப் பொருள்கள்
கைப்பற்றப்பட்டன. மேலும் கொள்ளையின் போது போலி எண்
பட்டையுடன் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் மற்றும்
கூர்மையான ஆயுதம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்
அவர்.
அந்த எழுவரும் போதைப் பொருள் உள்பட பல்வேறு குற்றப்பதிவுகளைக்
கொண்டிருப்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறிய அவர், அவர்கள் அனைவரும் தண்டனைச் சட்டத்தின் 457வது பிரிவின் கீழ் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


