ஷா ஆலம், பிப். 26 - ஈராண்டுகளுக்கு முன் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு எதிராக அவதூறான கருத்துக்களைக் கூறியதற்காக நீதிமன்றத்தில் வெளிப்படையாக பகிரங்க மன்னிப்பு கோர கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி முகமது இன்று ஒப்புக்கொண்டார்.
நீதிபதி ரோஸி பைனன் முன்னிலையில், சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அமிருடினை நோக்கி சனுசி வாசித்த மன்னிப்பு அறிக்கையை அவரின் பத்திரிகைச் செயலாளர் ஜெய் ஜெய டேனிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் வாதிக்கு எதிராக அதே அவதூறான அறிக்கைகளை வெளியிடவோ, வெளியிட உதவவோ, மீண்டும் குறிப்பிடவோ அல்லது வெளியிட காரணமாகவோ இருக்கவோ மாட்டேன் என்று சனுசி அந்த அறிக்கையில் உறுதியளித்தார் என்று ஜெய் ஜே அப்பதிவில் கூறினார் .
சுங்கை கிள்ளான் துப்புரவுத் திட்டம் குறித்த சனுசியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக அமிருடின் இன்று காலை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வந்தார்.
அமிருடின் சார்பில் வழக்கறிஞர் ஹைஜான் ஓமார் ஆஜரான வேளையில் சனுசியை வழக்கறிஞர் வான் ரோஹிமி வான் டாவுட் பிரதிநிதித்தார்.


