கோத்தா பாரு, பிப். 26 - தாய்லாந்திலிருந்து டுரியான் உள்பட பலவகையான பழ மரக்கன்றுகளை நாட்டிற்குள் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பொது நடவடிக்கை குழுவின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படைப்பிரிவு முறியடித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ரந்தாவ் பஞ்சாங்கின் கம்போங் பாரிட் ஆயரில் ஒரு லோரியை நிறுத்திய அப்படைப் பிரிவினர் அதில் கருப்பு முள் டுரியன், லைச்சி மற்றும் லோங்கான் அடங்கிய 14,500 பழ மரக்கன்றுகள் இருப்பதைக் கண்டனர்.
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 1,000க்கும் மேற்பட்ட 'கருப்பு முள்' துரியன் கன்றுகள், 8,000 லைச்சி மரக் கன்றுகள் மற்றும் 5,500 லோங்கான் மரக் கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவு தளபதி டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
ஓப் தாரிங் வாவாசான் நடவடிக்கையின் கீழ் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பி.ஜி.ஏ. 8வது படைப்பிரிவு உறுப்பினர்கள் இரவு 10.20 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஒரு லோரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இச்சோதனையில் தாவரங்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்த மரக்கன்றுகளை பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த மதிப்பு 11 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கன்றுகளை உள்ளூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதாக நம்பப்படும் 36 வயது உள்ளூர் ஆடவரான லோரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக ரந்தாவ் பஞ்சாங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய அவர், 1976 ஆம் ஆண்டு தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் (சட்டம் 167) 5வது பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.


