ஈப்போ, பிப். 26 - சிம்பாங் பூலாய் வட்டாரத்தில் நேற்று நிகழ்ந்த வழிப்பறி சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதன் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஆடவர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் 62 வயது மூதாட்டி ஒருவரிடமிருந்து பிற்பகல் 1.35 மணியளவில் புகார் கிடைக்கப்பெற்றதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது சஜிடான் அப்துல் சுக்கோர் கூறினார்.
இந்த சம்பவம் காலை 9.40 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், யமஹா EZ115 ரக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைத் தாக்கி அவரது கையில் இருந்த தங்க வளையலை பறித்துச் சென்றதாகச் சொன்னார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 394 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


