(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 25 - பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் உள்பட மாநிலத்திலுள்ள மக்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் அமல்படுத்தி வருகிறது.
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையும் அடங்கும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையின் வாயிலாக பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் பட்டதாரிகளும் முதலாளிகள் வழங்கும் பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து மோரிப் தொகுதி உறுப்பினர் ரோஸ்னிசாம் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தவிர, மனித வள ஆட்சிக்குழுவின் கீழுள்ள யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் திறன் மேம்பாட்டு பிரிவின் வாயிலாக பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று பாப்பராய்டு குறிப்பிட்டார்.
மேலும், சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தின் (எஸ்.டி.டி.சி.) வாயிலாகவும் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறுகிய காலப் பயிற்சிகளில் பங்கேற்பதன் வாயிலாக இளைஞர்கள் வேலை மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் பெறுவதற்குரிய சாத்தியம் உருவாகிறது என்று அவர் சொன்னார்.
திவேட் திட்டத்தின் வாயிலாகவும் பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் பட்டதாரிகளும் தங்கள் திறனை மேம்படுத்தி வேலைகளை பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கல்வியை முடித்தவர்கள் வேலை தேடுவதற்கு முன்னர் கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் இக்திஸாஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


