கோலாலம்பூர், பிப் 25 - ஊடகத் தொழில்துறையைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு AI பயன்பாட்டு பயிற்சியை விரிவுபடுத்த தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா திட்டமிட்டுள்ளது.
நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, AI உத்தி இன்னும் விரிவாக செயல்படுத்தப்படுவதையும் தேவைப்படுபவர்கள் மீது கவனம் செலுத்துவதையும் உறுதிசெய்யும் வகையில் பெர்னாமாவின் இலக்கிற்கு ஏற்ப இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
"இதுவே முதல் திட்டமாகும். இதற்காக அமெரிக்காவிலிருந்து நிபுணர்களை அழைத்து வருவதற்காக நாங்கள் ஹுவாவே மற்றும் ரெட்டோன் நிறுவனத்திடமிருந்து சிறந்த ஒத்துழைப்பைப் பெற்றுள்ளோம். ஊடக உலகில் ஏ.ஐ தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். ஊடகத் துறையைப் பின்புலமாகக் கொண்டிருப்பவர்கள் உட்பட பலவற்றை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்றார் அவர்.
கோலாலம்பூரில் பெர்னாமா ஏற்பாட்டிலான ‘AI in the Newsroom’ பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய டத்தின் படுக்கா நூருல் அஃபிடா இத்திட்டம் தொடர்ந்து சபா, சரவாக் வரை விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு சரவாக் கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய ஊடகவியலாளர் தினம் HAWANA கொண்டாட்டத்தின் போது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 10 லட்ச ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீட்டில், இந்த இரண்டு நாள் பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார்.


