குவாந்தான், பிப். 25 - ரொம்பினில் உள்ள முக்கிம் கெராத்தோங் முவாட்ஸாம் ஷா, சுங்கை ஜூபாவ் பகுதியில் சட்டவிரோதமாக தங்கச் சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரு கம்போடியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஐம்பத்திரண்டு மற்றும் 33 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் பகாங் மாநில அமலாக்கப் பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கஸானா ஒருங்கிணைந்த நடவடிக்கையில் நண்பகல் 12.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கைக் குழுவின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படைப்பிரிவு தனது முகநூலில் வெளியிட்டப் பதிவில் கூறியது.
இச்சோதனையின் போது அவ்விருவரும் செல்லுபடியாகும் சுரங்க உரிமத்தைக் காட்டத் தவறிவிட்டனர். மேலும் வாகனங்கள், சுரங்க உபகரணங்கள், தங்கத் துகள்கள் கொண்ட ரப்பர் கம்பளங்கள் உள்ளிட்ட 96,000 பொருள்கள் இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் மேல் விசாரணைக்காக ரொம்பின் மாவட்ட காவல் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக பகாங் மாநில அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 2001ஆம் ஆண்டு பகாங் கனிமவளச் சட்டம், 1959/63ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுவதாக தென்கிழக்கு படைப்பிரிவு தெரிவித்தது.
நாட்டில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை பி. ஜி. ஏ. தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


