(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 25 - மாநிலத்தில் இஸ்லாம் அல்லாதோருக்கான இடுகாடுகளை பராமரிக்கும் பொறுப்பு ஊராட்சி மன்றங்களின் வசம் உள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாம் அல்லாதோர் விவகார செயல்குழுவின் முடிவின்படி இஸ்லாம் அல்லாதோருக்கான இடுகாடுகளை பராமரிக்கும் பொறுப்பு ஊராட்சி மன்றங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
எனினும், சில இடங்களில் இடுகாடுகளைப் பராமரிக்கும் பொறுப்பை
இடுகாட்டுச் சங்கங்களும் சம்பந்தப்பட்ட வட்டாரத்திலுள்ள பெரிய மற்றும்
பிரதான ஆலயங்களும் ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று இஸ்லாம் அல்லாதோருக்கான குறிப்பாக
இந்தியர்களின் இடுகாடுகள் நிர்வாகம் குறித்து கோத்தா கெமுனிங்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இஸ்லாம் அல்லாதோருக்கான இடுகாடுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது ஊராட்சி மன்றங்களின் கடமையாகும் எனக் கூறிய பாப்பராய்டு, சாலை வசதி, நீர் விநியோகம், வடிகால் மற்றும் முறையான பராமரிப்பை உறுதி செய்வது ஆகியவையும் அவற்றில் அடங்கும் என்றார்.
இதனிடையே, ஸ்ரீ செர்டாங் தொகுதி உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த பாப்பராய்டு அத்தொகுதியிலுள்ள உள்ள பிரச்சனைக்குரிய இந்து இடுகாடு தொடர்பான முழுமையான விபரங்களை தாம் மாவட்ட நில அலுவலகத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த இடுகாடு தொடர்பான முழு விபரங்கள் கிடைத்தவுடன் இவ்விவகாரத்தை லீமாஸ் செயல்குழுவின் கவனத்திற்கு கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
ஸ்ரீ செர்டாங்கில் உள்ள இந்து இடுகாடு ஒன்று எதிர்நோக்கி வரும் நில நிர்வாக சிக்கல் மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அப்பாஸ் கேள்வியெழுப்பியிருந்தார்.


