கோலாலம்பூர், பிப் 25 - நகர்புறங்களில் உள்ள பழையக் கட்டிடங்களைப் புதுப்பித்து, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.
நகர்புறங்களில் 30 அல்லது 50 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
அதோடு, அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளைக் கருத்தில் கொண்டு, இப்புதியச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக, வழக்கறிஞர் சகுந்தலா நாராயணசாமி கூறினார்.
''இன்றைய சூழ்நிலையில் அனைத்துமே நவீன முறையில் மாறிவிட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வசதிகள் குறைவாக இருக்கும். ஏனெனில், அவ்விடம் மேம்படுத்தப்படாமல் இருக்கின்றன.
சுற்றுப்புறத்தில் அனைத்து இடங்களும் மேம்பட்டு இருப்பதால், இது போன்ற இடங்களும் சேர்ந்து வளர வேண்டும், மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சட்ட மசோதா முன்மொழியப்பட்டுள்ளது'', என்று அவர் கூறினார்.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு, அங்கு வசிக்கும் மக்களின் முழு ஒப்புதலை அரசாங்கம் பெற்றிருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அதனை செய்ய தவறும் தரப்பினர், சட்ட ரீதியாக சந்திக்கக் கூடிய சிக்கல்களையும் அவர் விளக்கினார்.
''தற்போது நடப்பில் இருக்கும் சட்டத்தின் கீழ், அதாவது, 1985-ஆம் ஆண்டு Strata Titles சட்டத்தின் கீழ் வீடமைப்பு பகுதி சம்பந்தமான எந்தவொரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், அந்த கட்டிடத்தின் அனைத்து உரிமையாளர்களிடமிருந்து ஒப்புதல் வாங்க வேண்டும் அதாவது 100 விழுக்காடு ஒப்புதல் வாங்க வேண்டும். இல்லையெனில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது'', என்று சகுந்தலா கூறினார்.
மேலும், 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத கட்டிடங்களின் மறுசீரமைப்பிற்கு 80 விழுக்காடு, 30 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு 75 விழுக்காடு, மிகவும் பாழடைந்து பாதுகாப்பில்லாத கட்டிடங்களுக்கு 51 விழுக்காடு, ஒப்புதலை உரிமையாளர்களிடமிருந்து பெற்றால் போதுமானது என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சகுந்தலா கூறினார்.
பரிந்துரைக்கப்பட்ட இச்சட்ட மசோதா மலாய்க்காரர்கள், பி40 மற்றும் எம்40 குழுவினரைப் புறக்கணிப்பதாக சில எதிர்ப்புகள் எழுந்தாளும், மக்களின் உரிமைகளுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாதவாறு அரசாங்கம் அதனைக் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


