கோலாலம்பூர், பிப் 25 - அமைச்சுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களான, NEM GoMEn பிரிவில் நிகர ஆற்றல் அளவீட்டின் கீழ் உள்ள ஒதுக்கீட்டீற்கு சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கு மலேசியாவின் நிலையான எரிசக்தி மேம்பாட்டு அமலாக்கத் தரப்பு SEDA அனுமதி அளித்திருக்கிறது.
இத்தகவலை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்கும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவும் அறிவித்திருந்தனர்.
இதற்கு முன்னர், அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் NOVA எனப்படும் `Net Offset Virtual Aggregation` திட்டத்தின் கீழுள்ள ஒதுக்கீட்டிற்கு, மட்டுமே விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
நாட்டிலுள்ள பொதுப் பள்ளிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுடன் வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்கு போட்டியிடுவதே இந்நடவடிக்கைக்கு காரணமாக அமைகிறது.
எனினும், பொதுவாக அதிகமான ஒதுக்கீட்டை NEM GoMEn கொண்டிருப்பதாக லீ கூறினார்.
"எனவே, இந்த மாற்றத்தின் மூலம், SBK-இன் கீழ் உள்ள பொதுக் கல்வி நிறுவனங்களின் ஒதுக்கீட்டை சமன்படுத்தியுள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் NEM GoMEn திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி பெறும்," என்றார் அவர்.


