கோலாலம்பூர், பிப். 25 — சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த நதி படுகை (பி.எல்.எஸ்.பி.) திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் அரசாங்கம் 170 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் மேற்பார்வையிலான திட்டம் உட்பட வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் மூன்று கட்டங்களையும் ஒருங்கிணைக்க அரசாங்கம் முடிவெடுத்ததன் வாயிலாக இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
மலேசிய மற்றும் தாய்லாந்து அரசுகளை உள்ளடக்கிய சுங்கை கோலோக் திட்டம், சுங்கை கோலோக் முகத்துவார தூர்வாரும் திட்டம் மற்றும் துப்பரவுப் பணிகள் ஆகியவையே அத்திட்டங்களாகும்.
திட்டத்தின் மூன்று கட்டங்களையும் விரைவுபடுத்தி ஒருங்கிணைத்தால் நாம் 170 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும். அதனால்தான் திட்டத்தில் நிர்வாகக் கொள்கைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன் என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
24 மாதங்கள் பிடிக்கக்கூடிய சுங்கை கோலோக் பி.எல்.எஸ்.பி. திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று கிளந்தான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தை சமாளிக்க அரசாங்கம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்திற்கான காரணங்கள் குறித்து மூவார் உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சருமான அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.


