பெட்டாலிங் ஜெயா, பிப். 25 - நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும்
விதிமுறைகளை மீறும் அந்நிய நாட்டு வணிகர்களுக்கு எதிரான அமலாக்க
நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகர்
மன்றம் அறிவித்துள்ளது.
மாவட்டத்தில் தூய்மையை மேம்படுத்தும் அதே வேளையில் உள்நாட்டு
வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உதவும் நோக்கில்
இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார்
முகமது ஜாஹ்ரி சாமிங்கோன் கூறினார்.
அந்நிய நாட்டினர் நடத்தும் வணிக வளாங்களை கண்டறிவதற்காக
கடந்தாண்டு முதல் குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன் தமது
தரப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவர்
சொன்னார்.
தூய்மை, பாதுகாப்பு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சட்ட அமலாக்கத்தை
மையமாகக் கொண்டு ஒவ்வொரு வாரமும் பெட்டாலிங் ஜெயா மாநகர்
மன்றம் அமலாக்க சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்
அவர்.
சட்டத்தை மீறும் அந்நிய நாட்டினர் விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும்
விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்க மாட்டோம். உள்நாட்டினர்
குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவு
படுத்துவதற்கு இந்த அமலாக்க நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என
நம்புகிறோம் என அவர் குறிப்ட்டார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2025 சிறந்த ஊடகவியலாளர் விருதளிப்பு
நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, வரி
செலுத்துவோரின் வசதிக்காக தங்கள் நிர்வாகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தமது தரப்பு கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.


