காஸா, பிப். 25 - இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து காஸா பகுதிக்கான உணவுப் பொருள் விநியோகத்தை இரட்டிப்பாக்குவதாக உலக உணவுத் திட்ட அமைப்பு நேற்று கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனமான டி பி ஏ. தெரிவித்தது.
அங்கு பட்டினி தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலைமை பதட்டமாகவே காணப்படுகிறது என்று ஜெர்மனியில் உள்ள உணவு திட்ட அமைப்பு அலுவலகத்தின் தலைவர் மார்ட்டின் ஃப்ரிக் கூறினார்.
கடந்த ஜனவரி 19 ஆம் தேதி போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து அந்த அமைப்பு காஸா பகுதிக்கு 30,000 டன்களுக்கும் அதிகமான உணவை விநியோகித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
2024 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான சராசரி உணவு விநியோகம் மாதத்திற்கு சுமார் 12,500 டன்கள் ஆகும். இந்த போர்நிறுத்தம் உதவியை இரட்டிப்பாக்க எங்களுக்கு உதவியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து சுமார் ஒரு மில்லியன் காஸா மக்களுக்கு உணவுப் பொருள், சூடான உணவு மற்றும் புதிய ரொட்டியை உணவு திட்ட அமைப்பு வழங்கியுள்ளது.
வடக்கு காஸா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் விநியோகம் துண்டிக்கப்பட்ட 80 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக உணவுப் பொருட்களை மீண்டும் வழங்க முடிந்தது.


